| ADDED : நவ 19, 2025 07:52 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை ஒரு நாள் புறக்கணித்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு விடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தை வழங்கி, நிரப்பட்ட படிவத்தை பெற்று வருகின்றனர். பெற்றப்பட்ட படிவம் பி.எல்.ஓ., செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடக்கிறது. இந்நிலையில், உரிய பயிற்சி அளிக்காமல், நிதி ஒதுக்கீடு இன்றி அவசர கதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்வதாகவும், இதனால், அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் பணி நெருக்கடி, மனஉளைச்சல் ஏற்படுத்துவதாகவும் கூறி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை நேற்று புறக்கணித்தனர்.