உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
திருக்கோவிலுார் : உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத மூன்றாம் சனிக் கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர் உலகளந்த பெருமாள் கல்பதித்த சங்கு சக்கரம், கர்ண பத்திரம், காசு மாலை, மாங்காய் மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பவித்ரோட்சவத்தை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு யாகசாலை மண்டபத்தில் சுதர்சன ஹோமம், பிரதான ஹோமம், மகா சாந்தி ஹோமம், மாலை 6:00 மணிக்கு பூர்ணாகுதி, சாற்றுமறை நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.