திருக்கோவிலுாரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஜி.அரியூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பொது மருத்துவம், இதயம், எலும்பு, நரம்பியல், மகப்பேறு, குழந்தைகள் மருத்துவம், நுரையீரல் உள்ளிட்ட 17 சிறப்பு பிரிவுகளுக்கு சிறப்பு நிபுணர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பொன்முடி எம்.எல்.ஏ., பங்கேற்று முகாமினை துவக்கி வைத்து, பார்வையிட்டார். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, நகராட்சி சேர்மன் முருகன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.