போக்குவரத்து நெரிசலை தடுக்க சர்வே: உளுந்துார்பேட்டையில் பணி தீவிரம்
உளுந்துார்பேட்டை பகுதி தென் மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதியாக இருப்பதால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றனர். இதனால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்துகொண்டு இருக்கும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உளுந்துார்பேட்டை பகுதியை வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது கடைகளை தாண்டியும், சாலையில் முன்பாக வாடகைகாக அடுத்தடுத்து கடைகள் வைத்துள்ளனர்.இதனால் பஸ் ஸ்டேண்ட் அருகே சென்னை சாலை, திருவெண்ணைநல்லுார் சாலை பகுதிகளில் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதால் வானங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். சாலையோர கடைகள், சாலையை அடைத்து ஆக்கிரமித்துள்ளதால் வாகன போக்குவரத்து பாதித்து வாகன நெரிசல் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்ட போக்குவரத்து போலீசார் கடைகளுக்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்காக கயிறு கட்டி வைத்தனர். கயிறுகளுக்கு உள் பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு அறிவித்திருந்தனர்.ஆனால் அவற்றைக் கடை உரிமையாளர்கள் பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்புகள், வாகனங்கள் சாலையில் நிறுத்தும் நிலைத் தொடர்கிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் அதிக வாகன போக்குவரத்து இருக்கும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது. இது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் அப்பகுதியை கடப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் நீண்ட துாரம் பயணம் செய்யும் விரைவு பஸ்கள் உளுந்துார்பேட்டை பகுதிக்குள் செல்லாமல் புறவழிச் சாலைகளிலேயே செல்வதால் பயணிகள் திண்டாடி வருகின்றனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் பஸ் ஸ்டேண்ட் முன்பு வரிசையாக பேரிக்காடுகளை வைத்தனர். பஸ் ஸ்டேண்ட்டிற்கு செல்லும் பஸ்கள் விருத்தாசலம் சாலை சந்திப்பு பகுதிக்கும், திருச்சி சாலை சந்திப்பு பகுதியான உழவர் சந்தை பகுதியில் பஸ்கள் திரும்பி வந்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். சாலை சந்திப்பு பகுதியில் பஸ்கள் திருப்புவதற்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என போக்குவரத்து போலீசார் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் விருத்தாசலம் சாலை சந்திப்பு மற்றும் திருச்சி சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கம் செய்து ரவுண்டான அமைப்பதற்கான சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக நெடுஞ்சாலைத் துறையின் சர்வே பிரிவு மோகன்,பரந்தாமன் உள்ளிட்ட குழுவினர் ரவுண்டானா அமைப்பதற்காக சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் விருத்தாசலம் சாலை சந்திப்பு, திருச்சி சாலை சந்திப்பு பகுதிகளில் ரவுண்டானா அமைப்பது குறித்து நேரில் ஆய்வு செய்தனர். இதனால் விரைவில் சாலை சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைவதோடு, வாகனங்கள் திரும்பிச் செல்வதற்கு எளிதான வழியாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.இருப்பினும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். கடைகளுக்கு குறைந்த வாடகை கட்டும் கடை உரிமையாளர்கள், கடையின் முன்பு சின்ன கடைகளை வாடகைக்கு விடுவதால் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அதிக வாடகை வசூலிக்கின்றனர். இது கடை உரிமையாளர்களுக்கு இரட்டிப்பு வருவாய் கிடைக்கின்றது. இதனால் 'ருசிகண்ட பூனை போல்'ஆக்கிரமிப்பு தொடர்கதையாகி வருகிறது.
உளுந்துார்பேட்டை பஸ் ஸ்டேண்டிலிருந்து சென்னை செல்லும் சாலை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவிடு செய்யப்பட்டன. அப்போது ஆக்கிரமிப்பு பகுதிகளையும் அளவீடு செய்து குறியீடு செய்தனர். ஆக்கிரமிப்பு மற்றம் சாலை விரிவாக்கப் பணி சில அரசியல் கட்சியினர் தலையீட்டால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றுவதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு கடந்த 5 கடந்த ஐந்து ஆண்டுகளாக பணி கிடைப்பில் போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நிறுத்தப்பட்ட பணியை விரைந்து துவங்கி பணியை நிறைவு செய்தால் மட்டுமே உளுந்துார்பேட்டை நகருக்கு விடிவுகாலம் பிறக்கும். செய்வார்களா என பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.