| ADDED : ஜன 02, 2024 05:38 AM
கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, எதிர்க்கட்சி தலைவரானார்.அதிகளவு கிராமங்களை உள்ளடக்கி, பின்தங்கிய நிலையில் இருந்த ரிஷிவந்தியம் தொகுதி அவரது வெற்றிக்குப்பின் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதியானது. பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்த மணலுார்பேட்டை உயர்மட்ட பாலம் கட்ட மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று தந்தார்.இது தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுதவிர, பல்வேறு பகுதிகளில் பாலங்கள், தார்சாலை, பயணிகள் நிழற்குடை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொகுதியில் செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் 28ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வாணாபுரம் மற்றும் மணலுார்பேட்டை பகுதியை சேர்ந்த வணிகர்கள் கடந்த 29ம் தேதி கடையை மூடி, துக்கத்தை வெளிப்படுத்தினர்.தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் விஜயகாந்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். குறிப்பாக, தி.மு.க., - அ.தி.மு.க., - பாஜ., - பா.ம.க., என பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கட்சி பாகுபாட்டை மறந்து, விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ஒரு சில கிராமங்களில் அவரது படத்தை ஊர்வலமாக கொண்டு சென்று அஞ்சலி செலுத்தினர்.ரிஷிவந்தியம் தொகுதியில் அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தியது. வியாபாரிகள் ஒன்றிணைந்து கடையை மூடியது என முன்னாள் எம்.எல்.ஏ., மறைவுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.