தென்பெண்ணையாற்று கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி: தென்பெண்ணையாற்றில் அதிகளவில் தண்ணீர் திறப்பால் பாதுகாப்புடன் இருக்க கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு; திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் தற்போது நீர் மட்டம் 113.60 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையில் இருந்து உபரி நீர் முழுவதும் தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளான மூங்கில்துறைப்பட்டு, மணலுார்பேட்டை, திருக்கோவிலுார் நகரம், சாங்கியம், கழுமரம், விளந்தை, கீழையூர், ஆவியூர், வடக்குநெமிலி, அத்தண்டமருதுார், வடமருதுார் உள்ளிட்ட பல்வேறு கரையோர கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்குவது, குளிப்பது, துணி துவைப்பது ஆடு, மாடுகளை குளிக்க வைப்பது, ஆற்றை கடப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. மேலும் ஆறுகளின் ஓரத்தில் மொபைல்போனில் செல்பி எடுத்தல் உள்ளிட்ட தேவையற்ற செயல்களை தவிர்க்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் தற்போது அதிகளவு மழை நீர் செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.