காடுகளில் இருந்து ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்தது! ஆயக்கட்டு நிலங்களில் விவசாயம் பாதிப்பு
தியாகதுருகம்: காடுகளில் யூகலிப்டஸ் மரம் வளர்ப்புக்காக மழைநீர் வெளியேறாமல் தடுக்கப்பட்டதால், நீர்வரத்து குறைந்து ஏரிகள் நிரம்ப முடியாமல் ஆயக்கட்டு பாசன நிலம் பாதிக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ள கல்வராயன் மலை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இவை பெரும் பகுதி காப்புக்காடுகளாக பராமரிக்கப்படுகிறது. இருப்பினும் மலை கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியை சிலர் சட்ட விரோதமாக விளை நிலங்களாக மாற்றி வருகின்றனர். கச்சிராயபாளையம், சின்னசேலம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஊர்களை ஒட்டி 48 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தரை காடுகள் அமைந்துள்ளது. இதில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இருந்த இயற்கை காடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. இவை வனத்துறையினரால் பராமரிக்கப்படுகிறது. மரங்கள் வளர்ந்ததும் அறுவடை செய்து பேப்பர் உற்பத்திக்கு அனுப்பப்படுகிறது. தரை காடுகளில் 2,733 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே இயற்கை காடுகள் அழிக்கப்படாமல் காப்புக்காடுகளாக பராமரிக்கப்படுகிறது. இயற்கை காடுகளாக இருந்தவரை அங்கு பெய்யும் மழை நீர் வெளியேறும் இடங்களில் நம் முன்னோர்கள் ஏரிகள் அமைத்து நீரை தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்தி விவசாயம் செழிக்க செய்தனர். மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஏரிகளின் நீர்வரத்து வனப் பகுதியில் பெய்யும் மழை நீரை நம்பியே உள்ளது. இயற்கை காடுகள் அழிக்கப்பட்ட பின் மாவட்டத்தில் மழை அளவு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இச்சூழ்நிலையில் காடுகளில் பெய்யும் மழை நீர் வெளியேறாமல் யூகலிப்டஸ் மரங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் வனத்துறையினர் கரைகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்தி விட்டனர். இதனால் பருவ மழை காலங்களில் கூட ஏரிகள் நிரம்ப முடியாமல் போகிறது. பெரும்பாலும் கிராமத்தை ஒட்டிய இடங்களில் அமைந்துள்ள ஏரிகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் தக்க வைக்கப்படும். தற்போதைய நிலையில் சராசரி மழை அளவு பெய்தால் கூட ஏரிகள் நிரம்ப முடியாமல் போகிறது. மிக கன மழை பெய்து காடுகளில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு கரைகளை உடைத்து ஏரிகளுக்கு தண்ணீர் வந்தால் மட்டுமே ஏரி நிரம்பும் நிலை உள்ளது. இயற்கை காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவாக பருவநிலை மாற்றத்தால் மாவட்டத்தில் சீரற்ற மழைப்பொழிவு ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வணிக நோக்கில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்களை அழித்து மீண்டும் இயற்கை காடுகளை உருவாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது தான் காடுகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஏரிகளுக்கு கிடைத்து ஆயகட்டு பாசன நிலங்களில் விவசாயம் செழிக்க முடியும்.