உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாத்தனுார் அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

சாத்தனுார் அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

திருக்கோவிலுார்: சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் அணை அதன் முழு கொள்ளளவான 119 அடி (7,321 மில்லியன் கன அடி) என்றாலும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 113 அடி, அதாவது 6,000 மில்லியன் கன அடி நீர் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் 12ம் தேதி முதல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து கடந்த 22ம் தேதி திடீரென அதிகரித்தது. அதிகபட்சமாக அன்று வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. மழையின் அளவு குறைந்ததை அடுத்து அணைக்கான நீர் வரத்து குறைய தொடங்கியதால், நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,853 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இது அப்படியே வெளியேற்றப்பட்டது. அணையின் இருப்பு 113.05 அடி, அதாவது 6,036 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 27ம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் சூழலில் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. இதனால், அணைக்கான நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் திடீரென அதிகரிக்கலாம் என்ற சூழலில் 119 அடி உயரமுள்ள அணையில், பாதுகாப்பு கருதி 113 அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை