கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காகித தொழிற்சாலை; அமைக்கப்படுமா; யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் வளருவதால் எதிர்பார்ப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. இங்குள்ள விவசாயிகள் பயிர் சாகுபடி செய்தும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். மாவட்டத்தில் வேலை வாய்ப்பினை தரும் வகையில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. இதனால், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் வேலைதேடி சென்னை, கோயம்புத்துார், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு உளுந்துார்பேட்டை அருகே ஆசனுார் சிட்கோ வளாகத்தில் காலணி தொழிற்சாலை அமைக்க தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். தொழிற்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தொழிற்சாலை திறக்கப்பட்டால் 20 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், இதில் 78 சதவீதம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாவட்டத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது காலணி தொழிற்சாலையுடன், கூடுதல் தொழிற்சாலை அவசியம் தேவைப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அரசு வியாபார நோக்கத்தில் யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கிறது. ரிஷிவந்தியம், மாடாம்பூண்டி கூட்ரோடு, அத்தியூர், குமாரமங்கலம், வெள்ளையூர் என சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகிறது. யூகயூகலிப்டஸ் மரத்தின் தண்டுகளில் உள்ள 'செல்லுலோஸ்' என்ற இழைகள் பேப்பர் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக உள்ளது. குறைந்த செலவில் அதிகளவு கூழ் கிடைப்பதாலும், வேகமாக வளரும் தன்மை கொண்டவை என்பதாலும் வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரங்களை அரசு வளர்க்கிறது. நன்கு வளர்ந்த மரங்கள் அறுவடை செய்து, காகித தொழிற்சாலைக்கு அனுப்பபடுகிறது. இதனால் அரசுக்கு கனிசமான வருவாய் கிடைக்கிறது. கள்ளக்குறிச்சி பகுதியில் அறுவடை செய்யப்படும் மரங்கள் தனியார் ஒப்பந்த லாரிகள் மூலம் கரூர் மாவட்டம் புகழூர் மற்றும் திருச்சி மாவட்டம் மொண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. லாரியில் ஒரு டன் எடை கொண்ட மரத்தை எடுத்து செல்ல சுமார் ரூ. 800 - ரூ. 900 வரை வாடகையாக அளிக்கப்படுகிறது. ஒரு லாரியில் 23 - 25டன் எடை கொண்ட மரங்கள் எடுத்துச்செல்லப்படும். இவ்வாறு செய்வதால் போக்குவரத்து செலவு அதிகமாகிறது. இதற்கு பதிலாக அதிகளவு யூகலிப்ட்ஸ் மரங்கள் வளரும் கள்ளக்குறிச்சி பகுதியில் காகித தொழிற்சாலை அலகு அமைக்கலாம். இதனால் போக்குவரத்து செலவு கனிசமாக குறைவதுடன், மாவட்டத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். காகிதம் தயாரிக்க பயன்படும் சவுக்கு மரங்கள் விழுப்புரத்தில் அதிகளவு அறுவடை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.