வட்டார போக்குவரத்து அலுவலகம் திறக்கப்படுமா? திருக்கோவிலுார் மக்கள் எதிர்பார்ப்பு
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கார், இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் அதிகம் பதிவாகும் தாலுகாவாக திருக்கோவிலூர் இருந்தது.இதன் காரணமாக திருக்கோவிலுாரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை வாகன உரிமையாளர்கள் கடந்த 20 ஆண்டாக முன்வைத்து வருகின்றனர். இதற்கான ஆயத்த நடவடிக்கையை கடந்த 10 ஆண்டிற்கு முன் போக்குவரத்து துறை துவங்கியது. இது அரசியல் காரணங்களால் தடைப்பட்டது. இந்நிலையில் மாவட்ட பிரிப்பின் காரணமாக கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் திறக்கப்பட்ட நிலையிலும், திருக்கோவிலூர் தாலுகாவை சேர்ந்த வாகன உரிமையாளர்கள் தினசரி 75க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் அல்லது உளுந்தூர்பேட்டை போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று வாகனங்களை பதிவு செய்து வருகின்றனர்.இதேபோல் ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு விழுப்புரம் அல்லது உளுந்தூர்பேட்டைக்கு செல்ல வேண்டியுள்ளது. திருக்கோவிலூரில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன விற்பனை மையம், டிராக்டர் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள் உள்ள நிலையில், இங்கு வாங்கப்படும் வாகனங்களை விழுப்புரம் அல்லது உளுந்தூர்பேட்டைக்கு எடுத்துச் சென்று பதிவு செய்வது வாகன உரிமையாளர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.வருவாய்த்துறை சார்பில் மாவட்டம் பிரிக்கப்பட்டு, திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டாலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலக வெப்சைட்டில், திருக்கோவிலுார் முகவரியில் வாகனப்பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பதிவுகளுக்கு உள் நுழைந்தால் உளுந்தூர்பேட்டை அல்லது விழுப்புரம் என இரண்டு 'ஆப்ஷன்' இருக்கிறது.மற்ற ஊர்களில் உள்ளவர்கள் அவர்களுக்கான வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எங்கு உள்ளதோ அங்கு மட்டுமே பதிவு செய்யலாம். இந்நிலையில் திருக்கோவிலூர் முகவரியில் உள்ளவர்களுக்கு மட்டும் இரண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதியும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு திருக்கோவிலூர் எந்த மாவட்டத்தில் வருகிறது என்ற சந்தேகமா அல்லது அதிக அளவு வாகன பதிவை ஒரே இடத்தில் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தால் இரண்டு இடங்கள் பரிந்துரைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.வட்டார போக்குவரத்து துறைக்கு அதிக வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கும் திருக்கோவிலூரில் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு வட்டார போக்குவரத்து பகுதி நேர அலுவலகத்தையாவது திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் பொன்முடி இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.