சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை நடுவே படுத்திருக்கும் மாடுகளால், விபத்து ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.சென்னை - பெங்களூரு -தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, நாள்தோறும் லட்சக்கணக்காண வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த நெடுஞ்சாலையில், மாத்துார், வல்லக்கோட்டை, வல்லம், போந்துார் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளை வளர்த்து வருபவர்கள், தங்களின் மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல், மேய்ச்சலுக்காக சாலையில் விடுகின்றனர்.அவை கூட்டம் கூட்டமாக, சாலையில் வலம் வருவதோடு, சாலையின் நடுவே படுத்து ஓய்வெடுக்கிறது.மேலும், திடீரென சாலையில் குறுக்கும் நெடுக்குமாக எழுந்து ஓடுவதால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இருசக்கர வாகன ஓட்டிகள், திடீரென சாலையின் குறுக்கே வரும் மாட்டின் மீது மோதி, விழுந்து காயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது.எனவே, நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் திரியும் மாடுகளை பிடித்து, கோ சாலையில் அடைக்க, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.