சாலை மீடியனில் சாய்ந்துள்ள மின்கம்பம் ஸ்ரீபெரும்புதுாரில் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்காக வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வந்தன.விபத்தை தவிர்க்க, 654 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை -- பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகின்றன.இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பென்னலுார் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதுார் ‛டோல்கேட்' அருகே, தேசிய நெடுஞ்சாலையை மீடியனில் உள்ள மின்கம்பம், சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.எப்போது வேண்டுமானாலும் சாலை நடுவே விழுந்து மின் விபத்து ஏற்படும் நிலையில் உள்ள மின் கம்பத்தால், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், தேசிய நெடுஞ்சாலை மீடியனில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்க, சம்பந்தப்பட்ட மின் வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.