கரும்பு வெட்டுக் கூலியை நிர்ணயிக்க முதல்வருக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
வாலாஜாபாத்:தமிழக கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் தனபால், செயலர் கஜேந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் இணைந்து தலைமை செயலகம், முதல்வர் தனிப்பிரிவுக்கு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்துள்ளனர்.அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ஆயிரம் கிலோ எடை கொண்ட கரும்புக்கான மொத்த விலை 3,366 ரூபாயில், வெட்டுக் கூலிக்கு 1,700 ரூபாய் செலவிட வேண்டி உள்ளது.இத்தகைய விலை, விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாததால், கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து, சர்க்கரை ஆலைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அண்டை மாநிலம், கர்நாடகவில் கரும்பு வெட்டுக் கூலியை அரசு நிர்ணயிப்பது போல, தமிழகத்திலும் அரசு நிர்ணயிக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும்.கரும்பு மற்றும் பணப் பயிர்கள் உள்ளிட்ட அனைத்து வகை பயிர்களையும் நாசப்படுத்தி உழவர்களுக்கு பொருளாதார சேதம் விளவைித்து வரும் காட்டு பன்றிகளை அறவே ஒழிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு பிர்கா அளவில் நிரந்தர கிடங்குகள் ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாரம்பரிய அரிசி உள்ளிட்ட இயற்கை விலை பொருட்களை அரசு கொள்முதல் செய்து, அரசு மருத்துவமனை, சத்துணவு திட்டம் மற்றும் ரேஷன் கடை போன்றவைக்கு பயன்படுத்த நடவடிக்கை வேண்டும்.விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை படிப்படியாக தடை விதித்து அதற்கு மாற்றாக இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்த வேண்டும்.வேலுார், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில், குடிநீர் மற்றும் பாசனத்திற்கு நீர் ஆதாரமாக உள்ள பாலாற்றில், அந்தந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் தடுப்பணைககள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு 11 கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டுள்ளது.