உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 3வது முழுமை திட்ட ஆவணம் தயாரிக்க 40,000த்திற்கும் அதிகமானோர் கருத்து

3வது முழுமை திட்ட ஆவணம் தயாரிக்க 40,000த்திற்கும் அதிகமானோர் கருத்து

சென்னை:சென்னை பெருநகருக்கான மூன்றாவது முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதற்கு இதுவரை, 40,000த்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமை திட்டம், கடந்த 2008ல் அறிவிக்கப்பட்டது.இதில், குறிப்பிடப்பட்ட பல்வேறு பரிந்துரைகள், நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

சி.எம்.டி.ஏ., திட்டம்

குறிப்பிட்ட ஆண்டுகள்இடைவெளியில் முழுமை திட்டத்தை ஆய்வு செய்வதற்கான குழுக்களும் அமைக்கப்படவில்லை.இதனால், இரண்டாவது முழுமை திட்டம் காலாவதியாகும் நிலை ஏற்பட்டது.இந்நிலையில், உலக வங்கி வழிகாட்டுதல் அடிப்படையில், மூன்றாவது முழுமை திட்டம் தயாரிப்பதற்கு, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. இதன்படி, மூன்றாவது முழுமை திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணிகள், கடந்த 2022 செப்., 20ம் தேதி துவங்கின.

கருத்து கேட்பு

இந்த தொலைநோக்கு ஆவணத்தில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.தனி இணையதளம் ஏற்படுத்தப்பட்டு,'ஆன்லைன்' முறையில் கருத்து கேட்பு பணிகள், கடந்த 2022ல் துவங்கின. இதையடுத்து, மண்டல வாரியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக கருத்துகள் பெறப்பட்டன.இது குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனி இணையதளம் வாயிலாக துவங்கிய கருத்து கேட்பு பணிகள், பல்வேறு நிலைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டன. மண்டல வாரியான கூட்டங்கள், வல்லுனர்கள், கட்டுமான துறையினர், மக்கள் பிரதிநிதிகளுக்கு என தனித்தனி கூட்டங்கள் வாயிலாக கருத்து கேட்பு நடத்தப்பட்டது.இதற்கு அடுத்த நிலையில், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கருத்து கேட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இதுவரை, 40,000த்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

ஆவண தயாரிப்பு பணி

சமூக வலைதள பதிவுகளை துல்லியமாக கணக்கிட்டால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதில் பெரும்பாலான மக்கள், தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை வசதிகளுக்கான தேவைகள் குறித்து தான் தெரிவித்துள்ளனர்.இதற்கு அடுத்தபடியாக நீர்நிலை பாதுகாப்பு, சாலை விரிவாக்கம் குறித்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இவ்வாறு பெறப்பட்ட கருத்துக்கள், தனியார் கலந்தாலோசகர் வாயிலாக தொகுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் முழுமை திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவண தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை