ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்கு புதிதாக கமிஷனர் நியமனம்
ஸ்ரீபெரும்புதுார்:தமிழகத்தில் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுலா, ஆண்டு வருமானம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு, பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் கருத்துருவை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு ஏற்கனவே அனுப்பியிருந்தது.அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்துவதாக, 2023ல் நவம்பர் 22ல் பேரூராட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதைத்தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி, நகராட்சி நிர்வாகத்துறை கடந்தாண்டு அறிவித்தது. இதற்கான அரசாணையை, தமிழக அரசு கடந்த 5ம் தேதி வெளியிட்டுள்ளது. மேலும், அரசிதழிலும் இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இருப்பினும், தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படாமல், பேரூராட்சி அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனால், விரைவாக புதிய நகராட்சி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இதை தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்கு, புதிய கமிஷனர் நியமித்து, நகராட்சி நிர்வாக துறை நேற்று முன்தினம் அறிவித்தது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி கமிஷனராக இருந்த ஹேமமாலினி, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியின் முதல் கமிஷனராக நிமிக்கப்பட்டுள்ளார். விரைவில், அவர் பொறுப்பேற்க உள்ளார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.