| ADDED : ஜூலை 05, 2024 12:02 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில், வண்டல் மண் அல்லது களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து செல்லலாம் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 186 ஏரிகள் பட்டியல், மாவட்ட அரசிதழில்கடந்த ஜூன் 16ல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள்படி, வண்டல் மண் எடுத்து செல்ல வேண்டிய நீர்நிலையும், மனுதாரரின் வசிப்பிடமும் அதே வருவாய் கிராமமாக இருக்க வேண்டும். மண் எடுக்க அனுமதி கோரும் விவசாயி, நிலம் வைத்திருக்க வேண்டும். மண் பாண்ட தொழிலாளராக இருப்பின், கிராம நிர்வாக அலுவலரிடம் உறுதி செய்ய வேண்டும்.tnesevai.tn.gov.inஎன்ற இணையதள முகவரி வாயிலாக சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் அனுமதி பெற்று, நீர்நிலைகளின் கட்டுப்பாட்டு அலுவலர் முன்னிலையில், வண்டல் மண் அல்லது களிமண் இலவசமாக எடுத்து கொள்ளலாம் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.மேலும் விபரங்களுக்கு, வருவாய் துறை, கனிமவளத்துறை, நீர்வளத்துறை அலுவலகங்களை நாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.