பாசி படர்ந்து குப்பையால் மாசடைந்து துர்நாற்றம் வீசும் பொடவூர் குட்டை
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பொடவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் தோல்குட்டை உள்ளது. இக்குட்டை அப்பகுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கியது.இந்த நிலையில், 2019 - 20ம் நிதியாண்டில், குடிமராமத்து பணிகளின் கீழ், 85,000 ரூபாய் மதிப்பில் இக்குளம் துார்வாரி,குளத்தின் கரைகள் பலப் படுத்தப்பட்டது.இதையடுத்து, படித்துறை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.நான்கு ஆண்டுகளாக அப்பகுதியினர் குட்டை யில் குப்பையினை கொட்டி வருகின்றனர். இதனால், குளத்தின் நீர் மாசடைந்து உள்ளதோடு, அப்பகுதியில் கடும்துர்நாற்றம் வீசுகிறது.மேலும், பள்ளியின் அருகில், செடி, கொடிகள் படர்ந்து குட்டையில் இருந்து, விஷ ஜந்துகள் நடமாடுவதால், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.குட்டையினை துார் வாரி சீரமைத்து, குப்பை கொட்டுவதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.