காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., மேயர் மகாலட்சுமிக்கும், கவுன்சிலர்களிடையே எழுந்த அதிருப்தி காரணமாக, கடந்த மாதங்களில், மாநகராட்சி கூட்டத்தை சரிவர நடத்த முடியாமல் போனது. தி.மு.க., - -அ.தி.மு.க., உள்ளிட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதும், கூட்டத்தை ஒத்தி வைத்து தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல் போனதும் நடந்தது. 33 பேர் மனு
லோக்சபா தேர்தல் முடிந்த பின், மேயர் மகாலட்சுமி மற்றும் கவுன்சிலர்களிடையேயான பிரச்னை சுமுகமாக முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, கடந்த மாதம் 7ம் தேதி, கலெக்டர் கலைச்செல்வியிடம், தி.மு.க.,- - அ.தி.மு.க.,- - காங்.,- - சுயேட்., என, 33 பேர் மனு அளித்தனர்.மேயர் விவகாரம் பெரிதானதால், அமைச்சர் நேரு, மாவட்ட செயலர் சுந்தர் ஆகியோர் சமாதானம் செய்தும், கவுன்சிலர்கள் பின்வாங்காமல் தங்கள் முடிவில் திட்டவட்டமாக உள்ளனர்.கவுன்சிலர்கள் மனு அளித்து ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில், மாநகராட்சி கூட்டம் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையே, மனு அளித்த 33 கவுன்சிலர்களுக்கும் கமிஷனர் செந்தில்முருகன், பதில் கடிதம் ஒன்றை அளித்துள்ளார். நேரில் சமர்ப்பிக்கவில்லை
அதில், ''கவுன்சிலர்கள் தன்னிடம் மனுவை நேரில் சமர்ப்பிக்கவில்லை என்றும், இரு கவுன்சிலர்களாவது நேரில் மனுவை சமர்ப்பித்திருக்க வேண்டும் எனவும், மேயரை நீக்க போதுமான காரணங்கள் மனுவில் இல்லை,'' எனவும் கமிஷனர் செந்தில்முருகன் பதில் அளித்துள்ளார்.மேயரை தி.மு.க., மேலிடம் மாற்றாததால், நிலைக் குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கடந்த திங்கட்கிழமையன்று, 10 நிலைக்குழு உறுப்பினர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து, கமிஷனர் செந்தில்முருகனிடம் கடிதம் அளித்தனர்.அதைத் தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, 33 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட, உறுதிமொழி படிவத்தை, ஆறு கவுன்சிலர்கள் சேர்ந்து, கமிஷனரிடம் நேற்று முன்தினம் வழங்கினர். கடிதம் வழங்கல்
இதையடுத்து, கணக்கு குழு, நிதிக் குழு ஆகிய நிலைக்குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள சாந்தி, சண்முகானந்தம், கயல்விழி, பிரேம்குமார் ஆகிய நான்கு கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, பொறியாளர் கணேசனிடம் நேற்று மாலை கடிதம் வழங்கினர்.ஏற்கனவே, 10 பேர் பதவி விலகிய நிலையில், மேலும் நான்கு பேர் என, 14 கவுன்சிலர்கள் தங்களது நிலைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.