காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 'தமிழ்நாடு நாள்' விழா, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், துறை இயக்குனர் ஒளவை அருள், மேயர் மகாலட்சுமி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.அமைச்சர் சாமிதாநன், எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர் 'தமிழ்நாடு நாள்' விழா தொடர்பாக விழா பேருரையாற்றினர்.இதைத் தொடர்ந்து, 'தமிழ்நாடு நாள்' விழாவை முன்னிட்டு, மாநில அளவில் நடந்த கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு அமைச்சர்கள் சாமிநாதன், அன்பரசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.அதை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு வரலாறு, பெயர் மாற்ற போராட்டம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கள் நடந்தது. இதில், பர்வீன் சுல்தானா, ஆழி.செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.நிகழ்ச்சி முடிந்த நிலையில், நிருபர்களிடம் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:சென்னையில், இரு ஆண்டுகளாக இந்த விழா நடந்தது. தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த அண்ணாதுரை பிறந்த மண்ணில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டங்களில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நலத் துறையும், வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகை வைப்பதை ஆய்வு செய்கிறது. பிற மொழிகளில் பெயர் வைத்துள்ள கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையும் 2,000 ரூபாயாக உயர்த்தி உள்ளோம்.வரைமுறையற்ற சமூக வலைதள சேனல்கள் மீது நடவடிக்கை எடுப்பது மாநில அரசால் மேற்கொள்ள முடியாது. மத்திய அரசு மூலமாக நடவடிகை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.