உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரோமியோக்கள் தொல்லை அதிகரிப்பு காஞ்சியில் பள்ளி மாணவியர் அச்சம்

ரோமியோக்கள் தொல்லை அதிகரிப்பு காஞ்சியில் பள்ளி மாணவியர் அச்சம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் சேக்குபேட்டை, காமராஜர் வீதி, சி.வி.ராஜகோபால் தெரு உள்ளிட்ட பகுதிகளில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் பல ஆயிரக்கணக்கான மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த மாணவியர் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும்போதும், மாணவியரை பின்தொடர்ந்து செல்லும் ரோமியோக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மாணவியர் சாலையில் செல்லும்போது எதிர்திசையில், டூ - வீலர்களில் செல்வது, அதிக ஒலி எழுப்பும் ஹாரனை அடித்தவாறு செல்வது, சாலை சந்திப்புகளில் கும்பலாக நின்று மாணவியரை கவரும் வகையில் பேசுவது, மொபைலில் யாரிடமோ பேசுவதை போல், மாணவியரிடம் மறைமுகமாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக, காஞ்சிபுரம் சேக்குபேட்டை குறுக்கு கவரை தெரு, பேருந்து நிலையம், மதுராந்தோட்டம் தெரு, சின்ன காஞ்சிபுரம் கே.எம்.வி., நகர், சி.வி.ராஜகோபால் தெரு, திருக்காலிமேடு சின்னவேப்பங்குளம் சந்திப்பு, அல்லாபாத் ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில், ரோமியோக்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால், மாணவியர் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மாணவியரை தினமும் பின்தொடர்ந்து செல்லும் ரோமியோக்களின் தொடர் தொல்லையால், அலைபாயும் மனதுள்ள பள்ளி மாணவியர், நாளடைவில் இளைஞர்களிடம் வலையில் சிக்குகின்றனர்.இதில், நயவஞ்சகத்துடன் பழகும் இளைஞர்களிடம் சிக்கும் மாணவியர், பள்ளிக்கு வரும்போதும், வீட்டிற்கு திரும்பும்போதும், அருகே உள்ள தெருக்களில் மணிக்கணக்கில் பேசுகின்றனர்.இதனால், மாணவியருக்கு படிப்பில் கவனம் சிதறுகிறது. கல்வி கற்க வேண்டிய நிலையில், காதல் வலையில் சிக்கி தடம்மாறி செல்வதால், எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி கொள்கின்றனர். தங்களது மகளின் விபரத்தை அறியும் பெற்றோரும், தங்களது குடும்ப கவுரவம் கருதி, பிறரிடம் சொல்ல முடியாத நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, காஞ்சிபுரத்தில் அரசு மகளிர் பள்ளியை சுற்றியுள்ள பகுதியில், காலை - மாலை நேரங்களில் பெண் போலீசார் கண்காணித்து, மாணவியரை பின்தொடரும் ரோமியோக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், மகளிர் போலீசார், பெண்கள் பள்ளிக்கு சென்று, மாணவியரின் பாதுகாப்பு குறித்தும், படிக்கும் வயதில் தடம்மாறி செல்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை