புத்தேரியில் ரூ.2.50 லட்சத்தில் சிறுபால பணிகள் துவக்கம்
புத்தேரி:காஞ்சிபுரம் ஒன்றியம் புத்தேரி ஊராட்சி, மேட்டு நகர் பிரதான சாலையின் குறுக்கே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மழைநீர் செல்லும் சிறுபாலம் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால், பருவமழையின்போது, மழைநீர் தடையின்றி செல்வதில் இடையூறு ஏற்பட்டு வந்தது. அப்பகுதியில் புதிதாக சிறுபாலம் அமைக்க வேண்டும் என, மேட்டுநகர் வாசிகள் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், ஒன்றிய பொது நிதியில் இருந்து, 2.50 லட்சம் ரூபாய் செலவில், மேட்டு நகரில், புதிதாக சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணி முடிக்கப்பட்டு 20 நாட்களில், சிறுபாலம் பயன்பாட்டிற்கு வரும் என, ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அலுவலர் தெரிவித்தார்.