குழாய் உடைப்பு சீரமைப்பு மந்தம்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெரு - திருமேற்றளீஸ்வரர் கோவில் தெரு சாலை வளைவு சந்திப்பில், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் திறந்துவிடும் 'கேட்வால்வு'க்கான 'மேன்ஹோல்' உள்ளது. இதில் உள்ள குழாயில், 10 நாட்களுக்கு முன், உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைப்புக்காக 'மேன்ஹோல்' பகுதியில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க சாலை தடுப்பு அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய்சீரமைப்பு பணி துவக்கப்பட்டது. இருப்பினும் குழாய் உடைப்புசீரமைப்பு பணி மந்தமாக நடந்து வருகிறது.வளைவு பகுதியில் சாலை தடுப்பு உள்ளதால்,10 நாட்களாக அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால், இச்சாலை வழியாக பெரும்பாக்கத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மாற்று வழியில் செல்கின்றன என, பிள்ளையார்பாளையம் பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, குடிநீர் குழாய் உடைப்பைசீரமைத்து, 'மேன்ஹோல்' பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பை அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.