| ADDED : ஏப் 16, 2024 11:37 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் கோவில் உற்சவத்தில் திரண்ட பக்தர்களிடம், அரசியல் கட்சியினர், தேர்தல் விதிகளை மீறி ஓட்டு கேட்டு, ஒலிபெருக்கியில் பிரசாரம் செய்தனர்.லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, நாளை மறுநாள் நடக்கிறது. இத்தேர்தல் குறித்து, தேர்தல் ஆணையம் அறிவித்த, மார்ச் 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. கோவில் உற்சவ விழாவிற்கு வரும் பக்தர்களிடம், ஓட்டு கேட்டு பிரசாரம் செய்யக்கூடாது என்பது விதி.திருக்கழுக்குன்றத்தில், நேற்று விதிகளுக்கு புறம்பாக, அரசியல் கட்சியினர், வாகன ஒலிபெருக்கி பிரசாரம் செய்தனர்.இப்பகுதி வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை விழாவில், நேற்று வெள்ளி அதிகார நந்தி சேவையில் வேதகிரீஸ்வரர், சுவாமியர், 63 நாயன்மார்கள் கிரிவலம் சென்றனர். திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பக்தர்கள், உற்சவத்தை காண திரண்டனர்.பிரதான அரசியல் கட்சியினர், கோவில் முன் பக்தர்களிடம் ஓட்டு கேட்டு, வாகனத்தில் ஒலிபெருக்கி பிரசாரம் செய்தனர். திருவிழாவில் நெரிசலுக்குள் வாகனத்தில் வந்து ஓட்டு கேட்டதை கண்டு, பக்தர்கள் முகம் சுளித்தனர்.