காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, 34வது வார்டு, வள்ளல் பச்சையப்பன் தெருவை ஒட்டியுள்ள குட்டைமேடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில், கழிவுநீர் கலந்ததால், கடந்த மாதம் 26ம் தேதி முதல், கடந்த 3ம் தேதி வரை என, 12 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதில் நிர்மலா 55; சாரதி, 15; கோமதி, 24 ஆகிய மூன்று பேர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பரிசோதனை
காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்நம்பி, மாநகராட்சி துப்புரவு அலுவலர் சுகவனம் உள்ளிட்டோர் தொடர்ந்து, குட்டைமேடு பகுதியில் வீடு வீடாகச் சென்று பாதிக்கப்பட்டோர் விபரம் குறித்துகேட்டறிந்தனர்.அப்பகுதியில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, டேங்கர் லாரி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில், சின்ன காஞ்சிபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் தலைமையில், நகர்ப்புற சுகாதார செவிலியர் அடங்கிய மருத்துவக் குழுவினர், குட்டைமேடில் கடந்த 3ம் தேதி முதல், மருத்துவ முகாம் அமைத்து, அப்பகுதிவாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.இதில், மேகலா, 36, என்பவருக்கு கடந்த 3ம் தேதி பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர், மேகலாவுக்கு சிகிச்சை அளித்து, வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றவரை, மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவருக்கு உடல்நலம் சரியானது.இதைத் தொடர்ந்து, மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குட்டைமேடு பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. மருத்துவ முகாம்
இதுகுறித்து, சின்ன காஞ்சிபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் கூறியதாவது:வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட குட்டைமேடு பகுதியில், கடந்த 3ம் தேதி முதல், நேற்று வரை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோமதி, சாரதி ஆகியோர் கடந்த 4ம் தேதியும், நிர்மலா 5ம் தேதியும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.கடந்த 3ம் தேதிக்குப்பின் ஒருவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு என பாதிப்பு ஏற்படவில்லை. இதனால், குட்டைமேடில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அப்பகுதிக்கு டேங்கர் லாரி வாயிலாக குளோரினேஷன் செய்த குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.