காஞ்சிபுரத்தில் 10 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில், தீபாவளி பண்டிகை காரணமாக, 10.7 டன் பட்டாசு கழிவுகள் சேகரித்து அகற்றப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் குப்பை கழிவுகளை உள்ளாட்சி அமைப்புகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. வெடி மருந்துகள் நிறைந்த பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கமாக சேகரிக்கும் குப்பை கழிவுகளை தனியாகவும், பட்டாசு கழிவுகளை தனியாகவும் அகற்றியுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியை பொறுத்தவரையில், அன்றாடம் 70 டன்னுக்கு மேலாக, தனியார் நிறுவனம் வாயிலாக குப்பை அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மாநகராட்சியின், 51 வார்டுகளிலும் பட்டாசு கழிவுகள் ஏராளமாக சேர்ந்தன. தீபாவளி பண்டிகை அன்று, 4.7 டன் பட்டாசு கழிவுகளும், நேற்று 6 டன் என, மொத்தம் 10.7 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு, நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் தனியாக குவிக்கப்பட்டுள்ளது.