உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் இடைத்தேர்தலுக்கு 162 ஓட்டுச்சாவடிகள்...தயார்: 32 உள்ளாட்சி இடங்களுக்கு களமிறங்கும் கட்சிகள்

காஞ்சியில் இடைத்தேர்தலுக்கு 162 ஓட்டுச்சாவடிகள்...தயார்: 32 உள்ளாட்சி இடங்களுக்கு களமிறங்கும் கட்சிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல், 32 இடங்களில், நடைபெற உள்ள நிலையில், 162 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைகின்றன. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காத நிலையில், தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் துவங்கி விட்டனர்.தமிழகம் முழுதும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. இதுதொடர்பான முன்னேற்பாடு பணிகளை, அனைத்து மாவட்டத்திலும் தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு மாவட்ட கவுன்சிலர், ஒரு மாநகராட்சி கவுன்சிலர், 3 ஊராட்சி தலைவர்கள் என, 32 உள்ளாட்சி பிரதிநிதிகள் காலி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யும் பணிகள் நடந்தன.இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில், 162 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைய இருப்பதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நேற்று முன்தினம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும், கட்சி பிரதிநிதிகளுக்கு ஓட்டுச்சாவடி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.ஓட்டுச்சாவடி விபரங்கள் வெளியிட்டதை தொடர்ந்து, தேர்தல் கமிஷன் தெரிவிக்கும் நாளில், வாக்காளர் பட்டியல் வெளியிட, தேர்தல் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.தேர்தல் பணிகளை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என, அரசியல் கட்சி நிர்வாகிகள் பலரும் கணக்கிட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு, கட்சி சின்னங்களின் அடிப்படையில் தேர்தல் நடைபெறாது என்றாலும், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - விடுதலை சிறுத்தைகள் என முக்கிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட தேர்தல் தொடர்பான ஆலோசனை பணிகள் செய்கின்றனர்.மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் போன்ற பதவிகள், கட்சி சின்னங்கள் அடிப்படையில் நடைபெறும் என்பதால், சீட் பெறுவதற்கு, மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து, சீட் கேட்க துவங்கி விட்டனர். சமுதாயம், வேட்பாளரின் வசதி போன்றவை கணக்கிட்டு யாரை போட்டியிட வைக்கலாம் என்ற பட்டியலை, பிரதான கட்சியின் நிர்வாகிகள் தயார் செய்கின்றனர்.ஆறு வகையான பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே நியமித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தேர்தலில் போட்டியிட விரும்பும் பலரும், தேர்தல் அதிகாரிகளை சந்தித்து, வாக்காளர் பட்டியல் விபரங்களை கேட்டு வருகின்றனர். பி.டி.ஓ., அலுவலகங்களுக்கு பலரும் இதுதொடர்பாக விசாரிக்க படையெடுக்க துவங்கி விட்டனர்ஏப்ரல் இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதால், முக்கிய அரசியல் கட்சியினர், கிராமங்களில் தங்களுக்கான ஆதரவு திரட்டும் பணிகளையும் கவனிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021, 2022 ஆகிய ஆண்டுகளில், அடுத்தடுத்து நடந்த கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றதால், இம்முறை நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலிலும், வார்டு உறுப்பினர் உட்பட தி.மு.க., அனைத்து இடங்களையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.மாவட்டம் முழுதும், 32 இடங்களில் மட்டுமே தேர்தல் நடைபெற இருப்பதால், பரபரப்பான சூழல் இல்லாவிட்டாலும், அந்தந்த கிராமங்களில், மே மாதம் முழுதும் பரபரப்பாக காணப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை