செப்டிக் டேங்க் பள்ளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே மதுரமங்கலம் அடுத்த எடையார்பாக்கத்தைச் சேர்ந்தவர் பூவரசன், 28; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஷகிலா பானு, 26. இந்த தம்பதிக்கு சுஸ்வின், 5, மோகநந்தன், 2, என்ற இரு மகன்கள் உள்ளனர்.நேற்று மாலை குழந்தைகள் இருவரும், பூவரசன் வீட்டு அருகே உள்ள உறவினர் உமாராணி வீட்டிற்கு விளையாட சென்றனர். மாலை 6:00 மணிக்கு, ஷகிலா பானு குழந்தைகளை அழைத்துவர உமாராணி வீட்டிற்கு சென்றார்.அப்போது, மோகநந்தன் வீட்டில் இல்லாததால், உமாராணி வீட்டின் பின்புறம் சென்று தேடி பார்த்த போது, செப்டிக் டேங்க் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் மோகநந்தனின் உடல் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, குழந்தையின் உடலை மீட்டு, மதுரமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.சுங்குவார்சத்திரம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.