உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயிர் சாகுபடி விபர பதிவில் காஞ்சிக்கு... 33வது இடம்! :வி.ஏ.ஓ.க்கள் எதிர்ப்பால் பின்தங்கியது

பயிர் சாகுபடி விபர பதிவில் காஞ்சிக்கு... 33வது இடம்! :வி.ஏ.ஓ.க்கள் எதிர்ப்பால் பின்தங்கியது

காஞ்சிபுரம்:விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட பயிர் சாகுபடி விபர பதிவு குறித்த சர்வே பணிகளுக்கு, குறைந்த பணம் தருவதால், வி.ஏ.ஓ., சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதற்கான பணிகள் நின்று போயுள்ளன. மாவட்டத்தில், 23 சதவீதம் மட்டுமே அடங்கல் விபரங்கள், ஆன்லைனில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், 33வது இடத்தில், காஞ்சிபுரம் உள்ளது.தமிழகத்தில் பயிரிடப்படும் பயிர்களின் பெயர், அதன் தன்மை, நடவு செய்துள்ள பரப்பு, மானாவாரியா அல்லது பாசன முறையா என்பது போன்ற விபரங்களை வி.ஏ.ஓ.,க்கள் கள ஆய்வு செய்து, வருவாய் துறை அடங்கல் கணக்கில் ஏற்றுவர்.இந்நிலையில் தமிழக அரசு, டிஜிட்டல் முறையில் பயிர் ஆய்வு செய்ய வேண்டும் என வி.ஏ.ஓ.,க்களை வற்புறுத்தி வருகிறது. இதன் வாயிலாக, ஒவ்வொரு வி.ஏ.ஓ.,விற்கும் வழங்கப்படும் மொபைல்போன் செயலி வாயிலாக நேரடியாக விவசாயி பயிரிட்டுள்ள நிலத்திற்கே சென்று, அங்கிருந்து மொபைல் செயலியை ஆன் செய்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.அதற்கு பின் வி.ஏ.ஓ.,க்கள் அந்தந்த வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அடங்கல் கணக்குகளில் பயிர், பயிரிட்ட பரப்பு விபரங்களை ஏற்ற வேண்டும். இதற்கு அனைத்து வி.ஏ.ஓ., சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், பயிர் சாகுபடி விபர பணிகளையும், கிராம நிர்வாக அலுவலர்கள் தற்போது மேற்கொள்ளவில்லை.இதன் எதிரொலியாக, கடந்த 9ம் தேதி விபரப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 23 சதவீத அளவுக்கே, பயிர் விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 தாலுகாக்களின்கீழ் 25 குறுவட்டங்களில், 479 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், 11 லட்சத்து 47,914 சர்வே எண்கள் உள்ளன.இந்த சர்வே எண்களில் உள்ள நில வகைப்பாடு, பயிரிடப்பட்டவை விபரம், உரிமையாளர் பெயர் என அனைத்து விபரங்களையும் மொபைல் செயலியில் பதிவிட வேண்டும்.இந்த மொத்த சர்வே எண்களில், 2 லட்சத்து 74,325 சர்வே எண்களின் விபரங்கள் மட்டுமே ஆன்லைனில் பதிவிடப்பட்டுள்ளன. இது, 23.9 சதவீதமாகும். மீதமுள்ள, 8 லட்சத்து 73,589 சர்வே எண்களின் விபரங்கள் பதிவிடப்படாமல் நிலுவையிலேயே உள்ளன.தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் 90 சதவீதம் மேலாக பயிர் சாகுபடி விபர சர்வே பணிகளை முடித்துள்ளது. அடுத்தபடியாக, கன்னியாகுமரி, துாத்துக்குடி போன்ற மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், காஞ்சிபுரம் மாவட்டம் 33வது இடத்திலும், செங்கல்பட்டு 34வது இடத்திலும் உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், சம்பா, நவரை, சொர்ணாவாரி என மூன்று பருவங்களில் நெல், கரும்பு மற்றும் தோட்ட பயிர்கள் பயிடப்படுகின்றன. இந்த பருவங்களில், கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று, போட்டோவுடன் ஆன்லைனில் பதிவிட வேண்டும். இதனால், சர்வே எண்கள் விடுபட்டது என்ற புகார் வராது. தவறான விபரங்களையும் பதிவிட முடியாது. அடங்கல் விபரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுவதால், விவசாயிகள் நேரடியாக ஆன்லைனிலேயே அடங்கல் சான்று எடுத்துக் கொள்ளலாம். பயிர் காப்பீடு, பேரிடர் காலங்களில், இந்த அடங்கல் சான்று விவசாயிகளுக்கு உதவும்.கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பதிவேற்றம் செய்யப்படும் பதிவு ஒன்றுக்கு 10 ரூபாய் தரப்படும் என கூறினார்கள். குறுகிய காலத்தில் கிராம நிர்வாக அலுவலர்களால் செய்ய முடியாது. வெளி நபர்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.ஆனால், பதிவுக்கு 10 ரூபாய் இதுவரை தரவில்லை. ஆனால், மாவட்ட நிர்வாகம், லே- - அவுட் விபரங்களையும் பதிவிட சொல்கிறார்கள். வெளிப்படையாக விவசாயங்களை பதிவிட தான் இத்திட்டத்தை கொண்டு வந்தனர்.ஆனால், கட்டடங்கள், வீட்டு மனைகளையும் பதிவிட சொல்கிறார்கள். சொந்த மொபைல் போனை பயன்படுத்த சொல்கிறார்கள். சொந்த மொபைல் போனை பயன்படுத்துவதால் விரைவில் பழுதாகிறது. இதனால், டேப் கேட்கிறோம். கலெக்டர் அழைத்து பேச்சு நடத்தினார்கள்.மாநில அளவில் இரு சங்கங்கள் நடத்துவதாக கூறினோம். போராட்டம் நடத்துவதாக ஒரு மாதம் முன்பே முன்கூட்டியே நாங்கள் சொல்லிவிட்டோம். மாநில அளவிலான நிர்வாகிகள் சொல்லும் பட்சத்தில் கூறினால் உடனடியாக பணியை துவக்கி விடுவோம் என கூறிவிட்டோம். வரும் 17ம் தேதி, இரு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

10 சதவீத பணிகள்கூட நடக்காத கிராமங்கள்

காரைப்பேட்டை, செவிலிமேடு, ஓரிக்கை, கிளார், தாமல், ஆரியபெரும்பாக்கம், ஆலப்பாக்கம், சூரமேனிக்குப்பம், சிங்காடிவாக்கம், இலுப்பப்பட்டு, கரூர், கோவிந்தவாடி, தண்டலம், புரிசை, வளத்துார், கொளப்பாக்கம், குன்றத்துார், திருமுடிவாக்கம், கூலமணிவாக்கம், தண்டலம், இரண்டாம்கட்டளை, மாங்காடு, நல்லுார், வரதராஜபுரம், கீழக்கழனி, கொருக்கந்தாங்கல், காவனுார், பழவேரி, சிறுதாமூர், காவித்தண்டலம், பாலேஸ்வரம், படூர், சிறுமையிலுார், சின்னாளம்பாடி, நெற்குன்றம், சித்தாலப்பாக்கம், மலையாங்குளம், கட்டாங்குளம், சித்தனக்காவூர், பரணக்காவூர், தண்டரை.-----------

ராம நிர்வாக அலுவலர்களுடன் நான் ஏற்கனவே அழைத்து பேசியுள்ளேன். அவர்கள் அதே நிலைப்பாட்டில் உள்ளனர். நான் கூறுவதை மாவட்ட அளவிலான கிராம நிர்வாக அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், மாநில அளவிலான அவர்களது சங்க நிர்வாகிகள் கூறிய பின் பணியை தொடர்வதாக கூறுகிறார்கள். இதனால், ஆன்லைனில் பதிவிடும் பணிகள் அப்படியே உள்ளன.

எம். கலைச்செல்வி,கலெக்டர்,காஞ்சிபுரம் மாவட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ