பட்டா ரத்து செய்யக்கோரி 60 வயது பெண் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் அரங்கம் வெளியே, பட்டாவை ரத்து செய்யக்கோரி 60 வயது பெண் தீக்குளிக்க முயன்றார். காஞ்சிபுரம் அடுத்த, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள், 60; இவர், பெரும்பாக்கத்தில் உள்ள தன் இடத்தை, வெங்கடேசன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து, பட்டா வாங்கிவிட்டதாக புகார் தெரிவித்து வருகிறார். பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என, கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து வருகிறார். கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் கூட்டரங்கு வெளியே, திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முத்தம்மாள் முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து காப்பாற்றினர். போலீசாரும் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முத்தம்மாள் வேண்டுமென்றே இதுபோன்று, கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து பிரச்னை செய்து வருகிறார். முத்தம்மாள் பெயரில் சிறுனைபெருகல் கிராமத்தில் ஒரு பட்டாவும், பெரும்பாக்கத்தில் ஒரு பட்டாவும், அவரது தாயார் பெயரில் ஒரு பட்டா என, மூன்று பட்டாக்கள் உள்ளன. அவர் கூறும் பட்டா தொடர்பாக, ஏற்கனவே தெளிவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டா உத்தரவை ரத்து செய்ய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.