உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  8.7 கிலோ தங்க மோசடி வழக்கு :முன்னாள் கமிஷனர் உட்பட 9 பேர் ஆஜர் கருடசேவை உத்சவம் விமரிசை

 8.7 கிலோ தங்க மோசடி வழக்கு :முன்னாள் கமிஷனர் உட்பட 9 பேர் ஆஜர் கருடசேவை உத்சவம் விமரிசை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலை செய்ததில், 8.7 கிலோ தங்க மோசடி செய்யப்பட்ட வழக்கு விசாரணை காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று வந்தது. அதிகாரிகள், அர்ச்சகர்கள் வழக்கில் ஆஜராகினர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பயன்பாட்டில் உள்ள உற்சவர் சிலை தொன்மையானது. ஆனால், இச்சிலை கடந்த 2015ல் சேதமானதால், புதிய உற்சவர் சிலை செய்ய, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி, சோமாஸ்கந்தர் சிலை மற்றும் ஏலவார்குழலி அம்மன் என இரு உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. உற்சவர் சிலை செய்ததில் தங்க மோசடி நடந்திருப்பதாக அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின்படி சிவகாஞ்சி போலீசார், கடந்த 2017ல் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு உடனடியாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா, அர்ச்சகர்கள், ஸ்தபதி முத்தய்யா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதிதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் ஆகிய இரு சிலைகளிலும், 8.7 கிலோ தங்கம் இருக்க வேண்டும். ஆனால், முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தியதில், இரு சிலைகளிலும் தங்கம் இல்லை என்பது தெரிந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இவ்வழக்கு விசாரணையை தாமதம் செய்ததால், சிவகாஞ்சி போலீசாருக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, சிவகாஞ்சி போலீசார், இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த மோசடி வழக்கு, நீதிமன்ற விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு, டிச., 30ம் தேதி, முதல் விசாரணை துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, 9 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. முதல் விசாரணை நீதிபதி இனியா முன்பாக நேற்று துவங்கியது. ஹிந்து சமய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா, ஸ்தபதி முத்தய்யா, அர்ச்சகர்கள் என, 9 பேர் ஆஜராகினர். இவர்களுக்கு, குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு, அடுத்த விசாரணையை, ஜன., 5க்கு ஒத்தி வைத்து நீதிபதி இனியா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்