ஊராட்சி அலுவலகத்தில் இயங்கும் அங்கன்வாடி
வாலாஜாபாத்:தம்மனுாரில், ஊராட்சி அலுவலக கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.வாலாஜாபாத் அடுத்துள்ளது தம்மனுார் கிராமம். இக்கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 30 குழந்தைகள் பயில்கின்றனர். இந்த அங்கன்வாடி மையத்திற்கென பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடம் சிதிலம் அடைந்தது.கடந்த 2021ல், மழைக்காலத்தின் போது அக்கட்டடம் இடிந்து விழக்கூடும் என அப்பகுதியினர் அச்சம் அடைந்தனர். இதனால், அக்கட்டடம் அப்பகுதி மக்கள் மூலம் அப்போது இடித்து அகற்றப்பட்டது.அதை தொடர்ந்து, தம்மனுார் ஊராட்சி அலுவலகத்திற்கான கட்டடத்தின் ஒரு அறையில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.அப்பகுதி மக்கள் பலரும் பல்வேறு பணிகள் சார்ந்து தம்மனுார் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால், அங்கு ஆரம்ப கல்வி கற்பதற்கான சூழல் மற்றும் ஆரோக்கியம் ஏற்படுத்துவதற்கான வழிவகை குழந்தைகளுக்கு இல்லை என, பெற்றோர் புலம்புகின்றனர்.எனவே, தம்மனுாரில் அங்கன்வாடி மையத்திற்கென புதியதாக கட்டட வசதி ஏற்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.