திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு விமரிசை
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், கோகுலம் வீதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா, கடந்த 4ம் தேதி, காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது. விழாவையொட்டி தினமும், மாலை 3:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மஹாபாரத சொற்பொழிவு நடக்கிறது.இதில், திருவண்ணாமலை மாவட்டம், ஜப்தி காரியபந்தல் கிராமம் பால்ராஜன் மஹாபாரதத்தில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுகிறார். கடலாடி தங்கவேல் கவி வாசிக்கிறார். விழாவின் மற்றொரு நிகழ்ச்சியாக, கடந்த 18ம் தேதி முதல், தினமும், இரவு 10:00 மணிக்கு ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரதம் நாடகம் நடந்து வருகிறது.இதில், முதல் நாளன்று வில் வளைப்பு என்ற தலைப்பிலும், 19ம் தேதி சுபத்திரை திருமணம், 20ம் தேதி ராஜசூய யாகம், 21ம் தேதி திரவுபதி துகில் என்ற தலைப்பிலும் நாடகம் நடந்தது.நேற்று முன்தினம் இரவு அர்ச்சுனன் தபசு நாடகம் துவங்கியது. நாடகத்தின் தொடர் நிகழ்வாக நேற்று காலை, 7:00 மணிக்கு அர்ச்சுனன் வேடமிட்ட கலைஞர், 40 அடி உயர தபசு மரத்தில் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று விராட பருவம் என்ற தலைப்பிலும், நாளை கிருஷ்ணன் துாது என்ற தலைப்பில் நாடகம் நடக்கிறது. வரும் 29ம் தேதி வேகவதி நதிக்கரையில் காலை, துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும், 30ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் 27 நாட்களாக நடந்து வந்த அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா நிறைவு பெறுகிறது.