குப்பை கழிவுநீர் கலப்பதால் மாசடையும் ஆதனஞ்சேரி ஏரி
படப்பை:குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில் ஆதனஞ்சேரி ஏரி அமைந்துள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி அப்பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.இந்நிலையில், வண்டலுார்- - வாலாஜாபாத் சாலையில் இந்த ஏரியின் நீர்வரத்து கால்வாயில் படப்பை ஊராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது.மேலும், பிளாஸ்டிக் குப்பை, இறைச்சி கழிவுகள் கால்வாயில் கொட்டப்படுகின்றன. இவை மழையின் போது அடித்து செல்லப்பட்டு ஏரியில் கலப்பதால் நீர் மாசு ஏற்படுகிறது.இந்த பகுதியில் கொட்டப்பட்ட குப்பையை அகற்றி, குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.