இருசக்கர வாகனங்களுக்கு ஏர்போர்ட்டிற்குள் தடை
சென்னை : சென்னை விமான நிலைய வளாகத்திற்கு விமான நிலைய ஆணைய ஊழியர்கள், போலீஸ், மத்திய தொழில்பாதுகாப்பு படையினர், குடியுரிமை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிறுவன ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். அனுமதி மறுப்பு
இவ்வாறு வேலைக்கு வருவோரில், பெரும்பாலானோர் பைக்கில் வருவது வழக்கம். சிலரை, குடும்ப உறுப்பினர்களால் முனையம் வரை பைக்கில் அழைத்து வந்து விட்டுச் செல்வர்.இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்குள் பைக்கில் செல்ல நேற்று முதல் அனுமதி மறுக்கப்பட்டுஉள்ளது. விமான நிறுவன ஊழியர்களை விட்டுச் செல்ல வருவோர், மற்ற பணியாளர்கள், செய்தியாளர்களுக்கும் அனுமதி கிடையாது என, வாகன நிறுத்த தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் தடை விதித்துள்ளனர்.பாதுகாப்பு காரணங்களுக்காக எட்டு ஆண்டு களாக ஆட்டோக்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பைக்குகளுக்கும் தடை விதித்திருப்பது, விமான நிலைய வளாகத்திற்கு தினசரி வந்து செல்வோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.ஆனால், வாகன நிறுத்தத்தை பராமரிக்கும் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தி, திருப்பி அனுப்புகின்றனர்.இருசக்கர வாகனங்களை, மல்டி லெவல் வாகன நிறுத்தம் பகுதியில் நிறுத்த வேண்டும் அல்லது விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு முனையத்துக்கு நடந்து வரலாம் என, அவர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:விமான நிலையத்தில் சமீப நாட்களாக இருசக்கர வாகனங்களில் வரும், சிலர் வேகமாக செல்வதும், விபத்துகள் நடப்பதும் அதிகரித்துஉள்ளது. முனையங்களின் வெளியே அவற்றை நிறுத்திச் செல்வதால், போக்குவரத்துக்கும் இடையுறாக உள்ளது. பாதுகாப்பு
இதனால், இருசக்கர வாகனங்களை உள்ளே வர அனுமதிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளோம். விமான நிலைய இயக்குனர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட, தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.