குட்டையில் மூழ்கியவர் உடல் மூன்று நாட்களுக்கு பின் மீட்பு
குன்றத்துார்:சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன், 28. இவர், குன்றத்துாரில் நண்பர்களுடன் தங்கி, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை, நண்பர்களுடன் குன்றத்துார் அருகே எருமையூரில் உள்ள கல் குவாரி குட்டையில் குளித்தபோது, பாலமுருகன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானார்.தீயணைப்பு வீரர்கள், மெரினா மீட்பு குழுவை சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தேடி வந்தனர்.குவாரி குட்டையில், 250 அடி ஆழத்திற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால், நீரின் அழுத்தம் காரணமாக, உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், மூன்று நாட்கள் தேடியும் உடல் கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று நான்காவது நாளாக, தீயணைப்பு வீரர்கள் உடலை தேடும் பணியில் ஈடுபட சென்ற போது, பால முருகன் உடல் குட்டையில் மிதந்தது.இதையடுத்து, பாலமுருகன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சோமங்கலம் போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.