பிரதான குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் வீணாகும் குடிநீர்
கீழ்கதிர்பூர்:காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூரில், பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருவதால், குழாயை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள, 51 வார்டுகளில், 1,060க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போருக்கு வேலுார் மாவட்டம், திருப்பாற்கடல் பாலாறு மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை கிணறு அமைத்து, நிலத்தடியில் குழாய்கள் புதைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பாற்கடலில் இருந்து காஞ்சிபுரத்திற்கு செல்லும் பிரதான குழாயில், கீழ்கதிர்பூர் அரசு நடுநிலைப்பள்ளி அருகே உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மாநகராட்சி தேவையான குடிநீர், முழுமையாக செல்ல முடியாத நிலை தொடர்கிறது. தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, கீழ்கதிர்பூரில் சாலையும் சேதமாகி வருகிறது. எனவே, பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.