உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி... முடக்கம்!:ஏரி நீரால் பாலத்துக்கு பில்லர் அமைப்பதில் சிக்கல்

சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி... முடக்கம்!:ஏரி நீரால் பாலத்துக்கு பில்லர் அமைப்பதில் சிக்கல்

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணிக்கு, ஏரிகளில் நிரம்பி இருக்கும் நீரால், கட்டுமான பணி தடங்கல் ஏற்பட்டுள்ளது. கோடைக்கு ராட்சத இயந்திரங்களின் உதவியுடன் பணிகள் தீவிரம் காட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் வழியாக பெங்களூரு வரை, தங்க நாற்கர சாலை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை, ஒஸ்கேட்டே வழியாக பெங்களூருக்கு செல்வதற்கு, அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில், பெங்களூரு செல்லலாம். இந்த சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு, 2012ம் ஆண்டு சிவன்கூடல், மொளச்சூர், சிறுவாக்கம், கோவிந்தவாடி, நெமிலி, பாணாவரம் ஆகிய கிராமவாசிகளிடம் கருத்து கேட்பு கூட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடத்தினர். அடுத்தகட்டமாக, 2016ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நிலங்களை கையகப்படுத்தினர். அதிவிரைவு சாலை விரிவாக்க பணிக்கு, 7,406 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.இதில், 3,477 கோடி ரூபாய் கட்டுமான பணிக்கும், 3,929 கோடி ரூபாய் நில எடுப்பிற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.புதிய அதிவிரைவு சாலைக்கு, 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மண் மாதிரி சேகரிக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் செய்தனர். முதற்கட்டமாக, கூத்தவாக்கம் ஏரி, மணியாட்சி, கோவிந்தாவாடி ஏரி உள்ளிட்ட இடங்களில் உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணிகள் நடக்கின்றன.இதையடுத்து, உயர்மட்ட பாலங்கள் மற்றும் அந்த உயரத்திற்கு ஏற்ப, மண் சாலை அமைக்கும் பணியை, ஒப்பந்தம் எடுத்தவர்கள் செய்து வருகின்றனர். சித்துார் - ராணிப்பேட்டை வரை, ராணிப்பேட்டை - காஞ்சிபுரம் வரை, காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வரையில், 105 கி.மீ., துாரம் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், 66.5 கி.மீ., துாரம் சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில், ஏரிகளில் சாலை அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன. உதாரணமாக, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மகேந்திரவாடி, உளியநல்லுார் ஆகிய கிராமங்களில் பில்லர் அமைக்கும் பணிகள் அரைகுறையாக உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி, சிறுவாக்கம், காட்டுப்பட்டூர் ஆகிய பகுதிகளில் பாலங்கள் இணைப்பு ஏற்படுத்தும் பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.குறிப்பாக, ஏரிகளில் தண்ணீர் இருப்பு இருப்பதால், கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது. மேம்பாலங்களின் பில்லர்கள் மீது, இணைப்பு பாலத்தை ஏற்படுத்த முடியாமல் சாலை பணியாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.இதனால், 63 சதவீத பணிகள் நிறைவு பெற்றும், ஏரிகளின் மீது இருக்கும் மேம்பாலங்கள் இணைக்கும் பணிகளை முடிக்க முடியாமல், அதிவிரைவு சாலை அமைக்கும் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறியதாவது:வடகிழக்கு பருவ மழைக்கு, சில ஏரிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த ஏரியை ஒட்டி செல்லும் பில்லர்கள் மீது, மேம்பாலங்கள் இணைக்கும் பணிக்கு, ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஏரிகளில், கோடைக்கு பின் தண்ணீர் குறைந்தவுடன் மேம்பாலங்கள் இணைக்கும் பணி துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை - பெங்களூரு விரைவு சாலை பணிகள் விபரம்

திட்டம் மொத்தம் துாரம் முடிக்கப்பட்ட துாரம் சித்துார் - -ராணிப்பேட்டை 24 கி.மீ., 19 கி.மீ.,ராணிப்பேட்டை - சோளிங்கர் 24.5 கி.மீ., 23.5 கி.மீ.,ராணிப்பேட்டை - காஞ்சிபுரம் 25.5 கி.மீ., 10 கி.மீ.,காஞ்சிபுரம் - -திருவள்ளூர் 31.70 கி.மீ., 14 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை