உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செய்யாறில் மேம்பால சாலை பணி ஆறு மாதங்களில் முடிக்க திட்டம்

செய்யாறில் மேம்பால சாலை பணி ஆறு மாதங்களில் முடிக்க திட்டம்

உத்திரமேரூர்:'பெருநகர் செய்யாறில், 78 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பால சாலைப் பணிகளில், 70 சதவீதம் முடிந்துள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்' என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலையில், தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதுார் சிப்காட், மாங்கால் சிப்காட், சுங்குவார்சத்திரம் சிப்காட் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களுக்கும், பேருந்துகளுக்கும் இந்த சாலைதான் பிரதானம். இருவழிச் சாலையாக இருந்த இச்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகளும் நடந்து வந்தன. விபத்துகளை தவிர்க்க, 30 கி.மீ., இருவழிச்சாலையை, நான்குவழிச் சாலையாக மாற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி, முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 78.80 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து மாதத்திற்கு முன் துவக்கப்பட்டது. அதில், மாங்கால் கூட்டுச்சாலை முதல் மானாம்பதி கூட்டுச்சாலை வரை, 9 கி.மீ., சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலை விரிவாக்க பணியில், ஆறு சிறுபாலம் மற்றும் ஒரு உயர்மட்ட பாலமும் கட்ட திட்டமிடப்பட்டது. தற்போது, ஆறு சிறுபாலங்கள் கட்டும் பணி முடிக்கப்பட்டு, பெருநகர் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதில், 70 சதவீதம் உயர்மட்ட பாலம் கட்டும் பணி முடிந்துள்ளன. இதுகுறித்து, வந்தவாசி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது: காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், முதற்கட்டமாக மாங்கால் கூட்டுச்சாலை முதல், மானாம்பதி கூட்டுச்சாலை வரை, 9 கி.மீ., நடந்து வருகிறது. தற்போது, ஆறு இடங்களில் சிறுபாலம் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதேபோல, பெருநகர் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி, 70 சதவீதம் முடிந்துள்ளது. இந்த நான்குவழிச் சாலை விரிவாக்க பணிகள், 2026 மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை