சி.எம்.டி.ஏ., பணியிடங்கள் புதிதாக 119 உருவாக்கம்
சென்னை, சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் எனும் சி.எம்.டி.ஏ.,வில், பணியிடங்கள் மற்றும் பணியாளர் நிர்வாகம் தொடர்பான பணி விதிகள், 1980ல் உருவாக்கப்பட்டன.இந்த பணி விதிகளில், காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை எழுந்தது. குறிப்பாக, புதிய பிரிவுகளை உருவாக்கி, அதற்கான கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டியது அவசியமானது.இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய பணி விதிகளுக்கு, பல்வேறு கட்ட தாமதத்திற்குப் பின், 2022ல் ஒப்புதல் பெறப்பட்டது.இதன்படி, பணியிடங்களை மறுசீரமைப்பு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக, சி.எம்.டி.ஏ., அனுப்பிய வரைவு திட்டத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த விபரங்களை, சி.எம்.டி.ஏ., தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.சி.எம்.டி.ஏ.,வில் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்களான, 803ல், 167 பணியிடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, 119 புதிய பணியிடங்களை உருவாக்க, அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.இதனால், சி.எம்.டி.ஏ.,வின் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை, 755 பணியிடங்களுக்கு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.இந்நிலையில், திருத்தப்பட்ட மறுசீரமைப்பு அறிக்கை அடிப்படையில், சி.எம்.டி.ஏ.,வில் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை, 776 ஆக உள்ளதாக, இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை ஏற்படுத்த ஆண்டிற்கு, 7.89 கோடி ரூபாய் செலவாகும். பழைய பணியிடங்களை ஒப்படைப்பதால் மீதமாகும், 3.86 கோடி ரூபாய் மற்றும் சி.எம்.டி.ஏ.,வின் நிதியில் இருந்து, இது ஈடு செய்யப்படும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் கூறப்பட்ட பணியிடங்கள் சீரமைப்பு அறிக்கையை, பிரிவு வாரியாக தற்போது பணியில் உள்ள அலுவலர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், 30 சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிந்துள்ளது. குறிப்பாக, துணை திட்ட அலுவலர்களுக்கான, 15க்கும் மேற்பட்ட பணியிடங்கள், 13 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர்த்து, புதிதாக அறிவிக்கப்பட்ட பல்வேறு பணியிடங்களையும் நிரப்ப, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரமைப்பு வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.