உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கனமழையால் காஞ்சியில் 250 ஏக்கர் பயிர் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுரை

 கனமழையால் காஞ்சியில் 250 ஏக்கர் பயிர் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுரை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழை காரணமாக 250 ஏக்கர் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் விளை பொருட்களை காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்கு பருவமழை காலமான தற்போது, 'டிட்வா' புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள, 250 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது. தமிழக முதல்வர் உத்தரவுப்படி, பாதிக்கப்பட்டுள்ள நெல் வயல்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்காணிக்க, கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறை அலுவலர்களால் வருவாய்த் துறையுடன் இணைந்து வயல் ஆய்வு மூலம், 33 சதவீதத்திற்கு மேல் ஏற்படும் பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான தண்ணீரை வடிகால் அமைத்து, உடனடியாக வடித்து விட வேண்டும். மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும். பூச்சி, நோய் தாக்குதலைத் தொடர்ந்து கண்காணித்து, பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால், பயிர் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும். நெற்பயிரில் தழைச்சத்து மற்றும் நுண்ணுாட்டச்சத்து குறைபாடு காணப்பட்டால், 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிங்க் சல்பேட் கலந்து 200 லிட்டர் நீருடன் கைத்தெளிப்பான் கொண்டு இலை வழியூட்டமாக தெளிக்க வேண்டும். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மேல் உரமாக, தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து 20 சதவீதம் கூடுதலாக அளிக்க வேண்டும். தோட்டக்கலை பயிர்களில் செடிகள், மரங்களைச் சுற்றி மண் அணைத்தல், ஊன்றுதலுக்கான குச்சிகளை நட்டு கட்டுதல், வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ