உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அட்மா திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் எண்ணிக்கை சரிவு வேளாண் சுற்றுலா செல்வதிலும் பாரபட்சம் என புகார்

அட்மா திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் எண்ணிக்கை சரிவு வேளாண் சுற்றுலா செல்வதிலும் பாரபட்சம் என புகார்

காஞ்சிபுரம்:வேளாண் துறையின் 'அட்மா' திட்டத்தில், தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. அதேபோல், வேளாண் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் விவசாயிகள் தேர்விலும் பாரபட்சம் காட்டுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், 1.50 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன.விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, 'அட்மா' என அழைக்கப்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை வாயிலாக, வயலில் செயல் விளக்கம் அளித்தல், வேளாண் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விவசாயிகளுக்கு மேற்கொள்ளப்படுகிறதுஇதை, வேளாண் தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண் தொழில் நுட்பத்தினர் ஒருங்கிணைத்து வந்தனர். இந்த திட்டம் துவங்கியேபோது, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.சமீபகாலமாக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி எண்ணிக்கை குறைந்ததால், பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன.குறிப்பாக, கடந்த நிதியாண்டு பயனடைந்த விவசாயிகளே, அடுத்த நிதியாண்டுகளிலும் பயன்பெறுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், சுற்றுலா பயிற்சிக்கு ஒரு சிலரையே அழைத்து செல்வதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.பயிற்சி பெற ஆர்வம் இருக்கும் விவசாயிகளை அழைத்து செல்வதில்லை. அதிக மகசூல் பெறும் முன்னோடி விவசாயிகளை புறக்கணிப்பதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட வேளாண் துறையினர் ஆய்வு செய்து, இத்திட்டம் நடைமுறைபடுத்துவதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, வாலாஜாபாதைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: வேளாண் தொழில்நுட்பம் குறித்து, விவசாயிகள் அறிந்துக் கொள்வதற்கு, மாவட்டம் மற்றும் மாநில பயணம் பயனுள்ளதாக உள்ளது. ஒருமுறை பயன்பெற்ற விவசாயி, மற்றொரு முறை அழைத்து செல்ல கூடாது என, வழிகாட்டு நெறிமுறையில் கூறப்படுகிறது.இருப்பினும், சில வேளாண் தொழில்நுட்ப அலுவலர்கள், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்குகின்றனர். ஆர்வம் இருக்கும் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதை சம்பந்தப்பட்ட துறையினர் சரிசெய்ய வேண்டும். அதேபோல், அட்மா திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறுவதும் குறைந்துவிட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, காஞ்சிபுரம் வேளாண் துறை அதிகாரி கூறியதாவது:வட்டார வேளாண் தொழில்நுட்ப அலுவலர்கள் பரிந்துரை செய்யும் நபர்களை அழைத்து செல்ல அனுமதி அளிக்கிறோம். ஒதுக்கீடு செய்யும் நிதிக்கு ஏற்ப திட்டங்களை வகுத்துக் கொள்கிறோம். தற்போது, அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதால், அதில் கவனம் செலுத்தி வருகிறோம். வேறு எந்தவொரு காரணமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

அட்மா திட்டத்தில் நிதி ஒதுக்கீடு

ஆண்டு நிதி ஒதுக்கீடு(லட்சத்தில்) பயனடைந்த விவசாயிகள்2021 - -22 36.80 8,0802022 - -23 42.35 5,2562023- - 24 24.03 2,1442024 - -25 15.45 4,860


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kesavan.C.P.
ஜன 10, 2025 07:23

வேளாண்மை. தொழில் நுட்பம் பயிற்சி சுற்றுலா குறுகிய காலத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பயணிகள திட்டமிட முடிவதில்லை. கடைசி நேரத்தில் பயனடைந்தவர்களை சேர்த்து கொள்ள வேண்டிய சூழல் கட்டாயம் ஏற்படுகிறது .


புதிய வீடியோ