பரந்துார் ஏர்போர்ட் வரும் ஊராட்சிகளில் கட்டட பணிகள்... நிறுத்தம் :வசதிகளை நிறைவேற்ற முடியாமல் பிரதிநிதிகள் தவிப்பு
காஞ்சிபுரம்:பரந்துார் விமான நிலையத்திற்குள் வரும் ஊராட்சிகளில், ரேஷன் கடை கட்டடம், அரசு திட்ட வீடுகள், மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட பல பணிகளை செய்யக்கூடாது என, மாவட்ட நிர்வாகம், வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால், பல கிராமங்களில் வசதிகளை மேம்படுத்த முடிவில்லை என, ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் புலம்புகின்றனர்.சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைய உள்ளது. இதற்காக, 12 கிராமங்களில், 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், 3,500 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்களாகும். மீதம், தனியாருக்கு சொந்தமான விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளாக உள்ளன.இந்த விமான நிலைய திட்ட எல்லைக்குள், வாலாஜாபாத் ஒன்றியத்தில் பரந்துார், தண்டலம், வளத்துார், மேல்பொடவூர் ஆகிய நான்கு ஊராட்சிகள்; ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் ஏகனாபுரம், குணகரம்பாக்கம், அக்கமாபுரம், எடையார்பாக்கம் ஆகிய நான்கு ஊராட்சிகள் என, மொத்தம் எட்டு ஊராட்சிகள், விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படுகின்றன.இந்த ஊராட்சிகளில், குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளை தவிர, பிற நிரந்தரமான கட்டடம் மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குணகரம்பாக்கம் ஊராட்சி, மேலேரி கிராமத்தில் ரேஷன் கடை, பாழடைந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. வளத்துாரில் சில சாலைகள் போட முடியாத நிலை உள்ளது. இதுபோல, பல்வேறு ஊராட்சிகளில் வசதிகள் இன்றி பரிதவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உள்ளாட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, ஊராட்சி பிரதிநிதிகள் சிலர் கூறியதாவது:பரந்துார் விமான நிலைய திட்டத்தால், குடிநீர், குளம் வெட்டுதல் ஆகிய சில பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்குகின்றனர். ரேஷன் கடை கட்டடம், அரசு திட்ட வீடுகள், மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட பல பணிகளுக்கு, அனுமதி மறுக்க்கிறனர்.அரசு துறை அதிகாரிகளிடம் கேட்டால், எங்கள் உயரதிகாரிகள் கூறுவதை நாங்கள் செய்கிறோம். நீங்கள் வேண்டுமானால், அவர்களிடம் முறையிடலாம் என்கின்றனர். நாங்கள் என்ன செய்ய முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: பரந்துார் விமான நிலையம் அமையவிருக்கும் ஊராட்சிகளில், தற்காலிக பணிகள் திட்டத்தின் கீழ் வரும் குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளை செய்துக் கொள்ளலாம்.நிரந்தரமான கட்டடங்கள் மற்றும் அரசு திட்ட வீடுகள் வழங்க வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில், வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதனால் தான் பல்வேறு கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.