சம்பளம் தராததால் ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக்! ஆங்காங்கே குப்பை குவிந்து காஞ்சிபுரம் நாறுது
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பை அகற்ற ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனத்தின் ஓட்டுநர்களுக்கு, மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நகர் முழுதும் குப்பை கழிவுகள் மூட்டை, மூட்டையாக தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் கீழ் உள்ள 51 வார்டுகளிலும் குப்பை அள்ளும் பணியை, மாநகராட்சி நிர்வாகம், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. மட்கும் குப்பை, மட்காத குப்பை என, பகுதி மக்களிடம் இருந்து தனித்தனியாக சேகரித்து, நத்தப்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பையின் எடைக்கு ஏற்ப தனியார் நிறுவனத்திற்கு, மாநகராட்சி நிர்வாகம் 'பில்' தொகை வழங்குகிறது. அதன்படி, ஒரு கோடி ரூபாய் வரை, மாதந்தோறும் குப்பையை அகற்றுவதற்காகவே மாநகராட்சி நிர்வாகம் செலவழிக்கிறது. தனியார் ஒப்பந்த நிறுவனம் குப்பை அகற்றும் விவகாரத்தில், பல மாதங்களாகவே சரிவர பணியை மேற்கொள்ளவில்லை என, கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்திலும், குப்பை அகற்றுவதில் குளறுபடி இருப்பதாகவும், ஒப்பந்த நிறுவனத்திற்கான 'பில்' தொகையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், பல புகார்களை கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், குப்பை அகற்ற பயன்படும் பேட்டரி வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு ஜூலை, ஆக., - செப்., ஆகிய மூன்று மாதங்கள் சம்பளம் வழங்கவில்லை என, நேற்று முன்தினமும், நேற்றும் என, இரு நாட்களாக 90க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பணி நிறுத்தம் செய்துள்ளனர். இதனால், நகர் முழுதும் குப்பையை அகற்ற வாகனங்கள் இல்லாமல், குப்பை கழிவுகள், மூட்டை மூட்டை யாக கிடக்கின்றன. துர்நாற்றம் வீசி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவ தாக, பல இடங்களில் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குப்பை அகற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு, சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம் தான் சம்பளம் தர வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம், தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு தர வேண்டிய பில் தொகையில், 50 சதவீதம் நிறுத்தி வைத்த காரணத்தாலேயே குப்பை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஓட்டுநர்களை போலவே, குப்பை அள்ளும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் சரிவர சம்பளம் வழங்குவதில்லை என, சாலை மறியல், பணி நிறுத்தம் என, பலகட்ட போராட்டங்களை ஒப்பந்த ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில், ஒப்பந்த நிறுவனமும், மாநகராட்சி நிர்வாகமும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சரிவர கையாளவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போன்ற நிலைமை ஏற்படாமல், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் பால சுப்ரமணியம் கூறியதாவது: ஒப்பந்த நிறுவனத்திற்கும், அவர்களுக்கு வாகனங்களை வி னி யோகம் செய்வோருக்கும் இடையே உள்ள பிரச்னை இது. இருப்பினும், அவற்றை பேசி சரி செய்து விட்டோம். குப்பையை எடுக்க சொல்லி விட்டோம். தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு பாக்கி ஏதும் இல்லை. அவர்களுக்கான 'பில்' தொகையை நாங்கள் வழங்கிவிட்டோம். குப்பை எடுக்க துவங்கி விட்டனர். எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பகுதிமக்கள் முகம் சுளிப்பு
தனியார் ஒப்பந்த நிறுவனம், 94 பேட் டரி வாகனங்கள், 57 இலகுரக வாகனங்கள், ஆறு லாரி, 400 ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் வைத்து, குப்பையை அகற்ற வேண்டும். ஆனால், 59 பேட்டரி வாகனங்கள், 27 இலகுரக வாகனங்கள், ஆறு லாரி அல்லது டிராக்டர் வாகனங்கள் மற்றும் 320 தொழிலாளர்களை வைத்தே, குப்பை அகற்றும் பணி நடப்பதாக கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர். இரு நாட்களாக குப்பை அகற்றாததால், கடும் துர்நாற்றம் வீசுவதால் பகுதி மக்கள் முகம்சுளிக்கின்றனர். இரு நாட்களாக நடந்த ஓட்டுநர் பணி நிறுத்தம், நேற்று மாலை விலக்கி கொள்ளப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஒப்பந்த ஊழியர்கள் தரப்பில் எதுவும் தெரிவிக்கப் படவில்லை.