| ADDED : டிச 04, 2025 04:27 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், விவசாய கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள், கொட்டும் மழையிலும், இரண்டு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். காஞ்சிபுரம் அசோக்நகர் பிரதான சாலையோரம் 50 அடி ஆழமுள்ள விவசாய கிணறு ஒன்று உள்ளது. நேற்று, காலை 8:00 மணியளவில், மேய்ச்சலுக்காக வந்த பசு மாடு ஒன்று, சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து விட்டது. கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் பசு கத்தியது. அருகில் இருந்தவர்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சென்று, கயிறு மூலம் பசு மாட்டை மீட்க முயன்றனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், பசு மாட்டை கயிற்றால் துாக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கொட்டும் மழையிலும், 2 மணி நேரம் போராடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.