எரிமேடை, சுற்றுச்சுவர் இன்றி சேரிதாங்கல் சுடுகாடு
வாலாஜாபாத்:ஆண்டிசிறுவள்ளூர், சேரிதாங்கல் சுடுகாடிற்கு எரிமேடை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், ஆண்டிசிறுவள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்டது சேரிதாங்கல் கிராமம். சேரிதாங்கல் மற்றும் புதுரோடு கிராமத்திற்கான ஒருங்கிணைந்த சுடுகாடு அப்பகுதி ஏரிக்கரை அருகே உள்ளது. இந்த சுடுகாடிற்கு சுற்றுச்சுவர், எரிமேடை மற்றும் சடங்கு முறைக்கான நீர் ஆதாரம் உள்ளிட்ட வசதிகள் இதுவரை மேற்கொள்ளாமல் உள்ளது. மேலும், சுடுகாடிற்கு செல்லும் சாலை மண் பாதையாக உள்ளது. இதனால், மழை நேரங்களில் அப்பாதையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சேறாகிறது. அம்மாதிரியான சமயங்களில், சடலங்களை சுடுகாடிற்கு வாகனம் வாயிலாக எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ஆண்டிசிறுவள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேரிதாங்கல், புதுரோடு கிராமத்திற்கான சுடுகாடிற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.