சிறுங்கோழி கிராமத்தில் சேதமான நிழற்குடை
உத்திரமேரூர்:புக்கத்துறை -- உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் சிறுங்கோழி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சென்னை, செங்கல்பட்டு, உத்திரமேரூர், வந்தவாசி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன. இங்குள்ள, பயணியர் நிழற்குடை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது, பயணியர் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத பகுதிவாசிகள் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர். கோடை வெயில் துவங்கி உள்ள நிலையில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பகுதிவாசிகள் மற்றும் மாணவ- மாணவியர் வெயிலின் தாக்கதிற்கு உள்ளாகின்றனர். மேலும், பயணியர் பேருந்துக்காக சாலையிலே காத்திருப்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றி, புதிய பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.