சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தால் அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அருகே, எறையூர் செல்லும் சிப்காட் சாலையில், சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வண்டலுார் --- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் வனப்பகுதி அருகே இருந்து, எறையூர், வைப்பூர் செல்லும் சிப்காட் சாலை பிரிந்து செல்கிறது. மருத்துவ சாதனங்கள் பூங்கா உட்பட, 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள் நாள்தோறும் இந்த சாலை வழியே சென்று வருகின்றன. இந்த சாலையில் உள்ள மின் கம்பம், ஆபத்தான நிலையில் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, ஆபத்தான நிலையில், சாய்ந்துள்ள மின் கம்பத்தை சீரமைக்க, சிப்காட் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.