உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பராமரிப்பின்றி துார்ந்து கிடக்கும் 91 ஏரிகளை சீரமைக்க அனுமதி பருவ மழைக்கு முன் முடிக்க துறை அதிகாரிகள் திட்டம்

பராமரிப்பின்றி துார்ந்து கிடக்கும் 91 ஏரிகளை சீரமைக்க அனுமதி பருவ மழைக்கு முன் முடிக்க துறை அதிகாரிகள் திட்டம்

காஞ்சிபுரம்:அரசு மற்றும் தனியார் பங்களிப்பு நிதியில், 91 சிற்றேரிகளை சீரமைக்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பருவ மழை துவங்குவதற்கு முன், ஏரிகள் சீரமைக்கும் பணிகளை முடிக்க, ஊரக வளர்ச்சி துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன.

நீர் பாசன வசதி

இதில், தலா, 100 ஏக்கர் பரப்பளவில் இருக்கும், 380 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் நிரம்பும் நீரில், 15,000 ஏக்கர் விளை நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன.வட கிழக்கு பருவ மழைக்கு, தமிழக ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் இருக்கும், ஏரிகளின் சீரமைப்பு நிதிக்குழு மானியத்தில், 250 கோடி ரூபாய் மற்றும் அரசு ஒதுக்கீடாக, 250 கோடி ரூபாய் என மொத்தம், 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என, சட்டசபை மானிய கோரிக்கையில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.தமிழகம் முழுதும், அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்கள், சீரமைக்கப்படவிருக்கும் ஒன்றிய ஏரிகளின் விபரப் பட்டியலை பொறியாளர்கள் வாயிலாக சேகரித்து வந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 91 ஏரிகள் தேர்வு செய்து திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.இதில், 67 ஏரிகளை, 4.30 கோடி ரூபாய் மாநில அரசு நிதியிலும், 24 ஏரிகளை, 2.83 கோடி ரூபாய் செலவில், தனியார் தொழிற்சாலைகளின் பங்களிப்பு நிதி என, 7.13 கோடி ரூபாய் செலவில், 91 ஏரிகள் சீரமைக்கப்பட உள்ளன.இந்த பணிகளை கண்காணிக்க, கலெக்டர் தலைவராகவும், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் செயலராகவும், நிர்வாகப் பொறியாளர்,வேளாண் இணை இயக்குநர், நீர்வள ஆதாரத்துறை நிர்வாகப் பொறியாளர், ஊரக வளர்ச்சி உதவிப்பொறியாளர் என, ஆறு நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுஉள்ளன.இந்த ஏரிகளை சீரமைக்கும் பணி நிறைவு பெற்றால், பொலிவு இழந்து காணப்படும் ஒன்றிய ஏரிகளின் கரைகள் மற்றும் ஏரிகள் புதுப்பொலிவு ஏற்படும் என, சிறு குறு விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பருவ மழை

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பேரிடர் காலங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, சிற்றேரிகளில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. அதிக தண்ணீரை தேக்கி வைக்கும் நோக்கத்தில், 91 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.ஏரிக்கரை மற்றும் மதகுகளை சீரமைக்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகள் பருவ மழை துவங்கும் முன் முடிக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

சீரமைக்கப்படவிருக்கும் ஏரிகள் விபரம்

ஒன்றியம் எண்ணிக்கைகாஞ்சிபுரம் 3உத்திரமேரூர் 52குன்றத்துார் 8ஸ்ரீபெரும்புதுார் 13வாலாஜாபாத் 15மொத்தம் 91


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை