உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு சிறப்பு தரிசனம் நடந்தது.அதிகாலை 2:00 மணியில் இருந்தே நீண்டவரிசையில் காத்திருந்த சொர்க்கவாசல் வழியாக சென்று மூலவரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோவில் பின்பக்கம் புதிதாக அமைக்கப்பட்ட கருங்கல் மண்டபத்தில், ரத்னஅங்கி சேவையில் அருள்பாலித்த உற்சவர் ஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், நேற்று காலை ரத்தினஅங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். ராபத்து உற்சவத்தையொட்டி, மாலை 6:00 மணிக்கு கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள நான்கு கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகிய சிங்கபெருமாள் கோவிலில், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில் கமலவல்லி சமேத அழகிய மணவாள பெருமாள், நேற்று காலை 6:00 மணிக்கு புதிதாக வழங்கப்பட்ட கருடவாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார். மூலவர் பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டையில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் காட்சியும், தொடர்ந்து கருடசேவை உற்சவமும் நடந்தது.வாலாஜாபாத்அய்யன்பேட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று காலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடேச பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். திம்மையன்பேட்டை கிராமத்தில், பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று காலை, 5:30 மணிக்கு கருட வாகனத்தில், பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி எழுந்தருளினார்.உத்திரமேரூர்உத்திரமேரூர் தாலுகா, திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், பரமபத வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பழையசீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.ஸ்ரீபெரும்புதுார்ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வடக்குப்பட்டில் உள்ள சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில், உற்சவர் சுந்தர வரதராஜ பெருமாள், அதிகாலை 5:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து, நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்பட்டது. ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், நேற்று காலை 3:00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், காலை 5:00 மணிக்கு ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அப்போது, சொர்க்கவாசல் திறப்பதை போல, இங்குள்ள மணிக்கதவு திறக்கப்பட்டது.

பிரபந்தம் பாடுவதில்இருபிரிவினருக்கு வாக்குவாதம்

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்புக்கு முன், வடகலை, தென்கலை பிரிவினரிடையே, யார் முதலில் பிரபந்தம் பாடுவது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து, ஹிந்து அறநிலையத் துறையினரும், போலீசாரும், இரு பிரிவினரிடம் பேச்சு நடத்திய போதே, இரு பிரிவினரும் தொடர்ந்து பிரபந்தம் பாடியதால் பிரச்னை நீண்டு கொண்டே சென்றது. பின், இரு பிரிவினரையும் பாட அறநிலையத் துறையினர் அனுமதித்தனர். இதையடுத்து, இரு பிரிவினரும் பிரபந்தம் பாடிய பின் கோவிலில் இருந்து வெளியே சென்றனர். இதனால், அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. -- நமது நிருபர் குழு- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை