வரி விதிப்பில் குளறுபடி தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், வரி விதிப்பில் சரியான விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என, தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, 46வது வார்டின் தி.மு.க., கவுன்சிலர் கயல்விழி, தன் வார்டில் உள்ள கட்டடங்களுக்கு சரியான வரி விதிப்பு செய்யப்படவில்லை என, தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதுபற்றி, மாநகராட்சி கூட்டத்திலும் பல முறை புகாராக தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்துள்ளார். மாநகராட்சிமுழுதும் கட்டடங்களின் மீதான வரி விதிப்பிலும், புகாருக்கு ஆளாகும் கட்டடங்கள் பற்றியும் ஆய்வு நடத்துவதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தன் வார்டில் வரி விதிப்பில் விதிமுறைகள் பின்பற்றவில்லை என, அவர் தெரிவிக்கிறார். இதுகுறித்து 46வது வார்டு கவுன்சிலர் கயல்விழி கூறியதாவது: மாநகராட்சியின் 46வது வார்டில் ஏராளமான கட்டடங்களுக்கு சரியான வரி விதிப்பு செய்யப்படவில்லை. காலி மனை வரி செலுத்தும் பலர் கட்டடங்கள் கட்டியுள்ளனர். குடியிருப்பு கட்டடங்கள் பல, வணிக ரீதியிலான கட்டடங்களாக செயல்படுகின்றன. கட்டப்பட்ட கட்டடங்களுக்கு ஏற்ப கணக்கிட்டு வரி விதிப்பும் செய்யப்படவில்லை. இவற்றை ஆய்வு செய்ய பலமுறை நான் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. 46வது வார்டில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்து சரியான வரி இனங்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.